போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
தேனி, பிப்.27: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கம்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்(45). கூலித் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் செந்திலைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், செந்திலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1 ஆண்டு மெய்க்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.