குப்பையை அகற்ற முடியாமல் நகராட்சிகள் திணறல்! நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகரிக்கும் கழிவுகள்
கூடலுார்; குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை அகற்ற நகராட்சிகள் திணறி வருகின்றன. இதனால் நெடுஞ்சாலை ஓரங்களில் பாலிதீன் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி, தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புறவழிச் சாலை அதிகளவில் விவசாய நிலங்களுக்கு மையப் பகுதியில் செல்கின்றன. விளை நிலங்களுக்கு செல்லும் கால்வாய் இதனை ஒட்டியே செல்கிறது. கடந்த சில மாதங்களாக புறவழிச் சாலையின் இரு பகுதிகளிலும் பாலிதீனுடன் கலந்த குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.
கூடலுார் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை குடியிருப்புகளை ஒட்டியுள்ள பெத்துக்குளம் பகுதியில் கொட்டப்படுகிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் யூனிட் கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை. இதனால் மலை போல் தேங்கும் குப்பையை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதே போல் கம்பம் நகராட்சியில் சேகரமாகும் குப்பை கூடலுார் தேசிய நெடுஞ்சாலை தனியார் மகளிர் கல்லுாரி அருகே கொட்டப்படுகிறது.
கடந்த சில நாட்களாக குப்பை தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமாக காட்சி அளித்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குப்பை கொட்டுவதற்கு இடமின்றி ஏராளமானோர் நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் குப்பையை கொட்டி வருகின்றனர். பாலிதீன் கழிவுகள் பலத்த காற்றினால் பறந்து, அருகே உள்ள விவசாய நிலங்களில் குவிந்து வருகின்றன. இதனால் மண்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சிகளில் சேகரமாகும் குப்பை பல மாதங்கள் மலை போல் தேக்கி வைக்காமல் உரம் தயாரிக்க பயன்படுத்தி குப்பையை அவ்வப்போது அகற்ற நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.