பெரியகுளத்தில் மதுபாரை மாற்ற கோரி தி.மு.க.,கவுன்சிலர் போராட்டம் வீட்டு விலங்குகள், கால்நடைகளுக்கு வரி விதிப்பு
பெரியகுளம் : பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்படும் தனியார் மதுபாரை மாற்ற கோரி தி.மு.க., கவுன்சிலர்
ஆபிதாபேகம் 45 நிமிடம் நகராட்சி கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா, பொறியாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, நகரமைப்பு ஆய்வாளர் வீரணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:
குமரன் (பா.ம.க.,): தூய்மைபணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவதில் தாமதத்தால் நகரின் தூய்மை பணி பாதிக்கிறது. வரும் மாதங்களில் சம்பளம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். இதில் முரண்படும் தூய்மை பணி ஒப்பந்ததாரரை ரத்து செய்து விட்டு வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்குங்கள்.
தலைவர்: இனி வரும் காலங்களில் மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதிதெரிவித்துள்ளனர்.
மணி வெங்கடேஷ் (அ.ம.மு.க.,): டிஜிட்டல் இந்தியா என அனைத்தும் மாறி வரும் நிலையில் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் ‘கருப்பு வெள்ளையில்’ வழங்கப்படுகிறது. கலரில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதே கருத்தை கவுன்சிலர்கள் குமரன், பால்பாண்டி உட்பட பெரும்பான்மையான கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
தலைவர்: விரைவில் கலர் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகபாண்டி (பார்வர்டு பிளாக்): 25 வது வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை. நகராட்சியில் வரி வசூல் நூறு சதவீதம் எட்டப்பட்ட நிலையில் மக்களுக்கு 50 சதவீத அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்தார். மது பார் மாற்ற கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
ஆபிதாபேகம் (தி.மு.க.,): பஸ்ஸ்டாண்ட் அருகே பள்ளிக்கூடம், நூலகம், பள்ளிவாசல், குடியிருப்புகள் உட்பட பல்வேறு முக்கிய பகுதியில் தனியார் மதுபாரினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை வேறு பகுதிக்கு மாற்றுங்கள் என கூறி 45 நிமிடம் கிழே உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதே கருத்தினை கவுன்சிலர்கள் கிஷோர்பானு, பவானி வலியுறுத்தினர். மூன்றாந்தலில் செயல்படும் பாரையும் மாற்ற கோரினர்.
தலைவர்: பஸ்ஸ்டாண்ட், மூன்றாந்தல் செயல்படும் பார்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உத்தரவு வந்தவுடன் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடைகள், விலங்குகளுக்கு உரிமை தொகை
ஏப்.1 முதல் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய், பூனை, மற்றும் கோழி, வான்கோழி, முயல், கிளி, புறா உட்பட பறவை இனங்களை கணக்கிட்டு ஒரு ஆண்டு உரிமைத்தொகையாக சிறியது, நடுத்தரம், பெரியது என கணக்கிட்டு ரூ.100 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுவது உட்பட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.