வருகை பதிவேடு குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த காப்பாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவு
ஆண்டிபட்டி; டி.பொம்மநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு செய்த கலெக்டரிடம் காப்பாளர் வெங்கடேஸ்வரன், வருகை பதிவேறு குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் அதிருப்தி அடைந்த கலெக்டர், ‘காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க துறையின் தனிதாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி தாலுகாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியத்திற்கு சென்றவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ‘மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறை வசதிகள் குறித்து கேட்டு, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின், திம்மரசநாயக்கனுாரில் வீடுகளில் சீரமைப்புப் பணிகள், டி.பொம்மிநாயக்கன்பட்டியில் ‘ஜல் ஜீவன்’ திட்ட குடிநீர் மேல்நிலை தொட்டியை பார்வையிட்டார். அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்திய பின் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு சென்றார். விடுதி காப்பாளர் வெங்கடேஸ்வரனிடம், ‘மாணவர்களின் வருகை பதிவேடுகள், விடுதியின் தரம் குறித்து’, கேட்டார்.
பதிவேடுகளை முறையாக பராமரிக்காத அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கலெக்டர், விடுதி காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வு, உடன் வந்திருந்த அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின் டி.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வைகை ரோட்டில் செயல்படும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக உணவுப்பொருள் கிட்டங்கியில் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவைகளின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த பல்வேறு துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் பொது மக்களிடம் மீண்டும் மனுக்கள் பெற்று, ’15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்’ என, உறுதியளித்தார்.