ஒருங்கிணைந்த அ.தி.மு.க., உருவாக தேனி அ.தி.மு.க ., நிர்வாகி விலகல்
போடி,:’ஒருங்கிணைந்த அ.தி.மு.க., உருவாவதற்கு கொடுத்த கோரிக்கை நிறைவேறாததால் தேனி அ.தி.மு.க., மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் குறிஞ்சிமணி பதவி விலகல் கடிதத்தை பொது செயலர் பழனிசாமிக்கு அனுப்பினார்.
அ.தி.மு.க., தேனி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சிமணி. இவர்,”அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு இன்றி செயல்படுவதால் தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரனை மீண்டும் அ.தி.மு.க., வில் இணைத்து செயல்பட பொது செயலாளர் பழனிசாமி முன்வர வேண்டும். அப்படி அ.தி.மு.க., ஒருங்கிணைந்தால் மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற முடியும்,” என பொது செயலருக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
கோரிக்கை நிறைவேறாததால் பதவி விலகல் கடிதத்தை பொது செயலருக்கு அவர் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொது செயலர் தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்கவே மாட்டேன் என்பதை சூசகமாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் மூலம் பழனிச்சாமி தெரிவித்த பிறகு தேனி மாவட்டத்தில் மார்ச் 2ல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க., நிர்வாகி பதவி விலகியுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.