குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ
கம்பம்: கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் இரண்டாவது முறையாக நேற்று மாலை தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தினமும் 20 டன் குப்பை சேகரமாகிறது.
ஆங்கூர் பாளையம் ரோட்டில் உள்ள குப்பை கிடங்கு இடம் போதாத நிலையில், குமுளி ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 4 ஏக்கர் வரை இடம் வாங்கி குப்பை கிடங்கு ஏற்படுத்தினர். அங்கு மலை போல் குப்பை குவிந்துள்ளது. ஆயிரக்கணக்கான டன் குப்பையை கையாள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் பிப்.16 ல் திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றிக் கொண்டது. கம்பம், உத்தமபாளையம் தீயணைப்பு வண்டிகள் வந்து பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் வரை எரிந்து அணைந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் தீப்பிடித்து மளமளவென எரிய துவங்கியது.
இதனால் ஏற்பட்ட கரும்புகை பல கி.மீ., சுற்றளவிற்கும் பரவியது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர்.