கோடை வெப்பத்தால் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள்: கால்நடைகள் சிரமம்
கூடலூர், மார்ச் 6: கூடலூரில் மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகின்றன. இதனால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு நீண்ட தூரம் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் செய்வோர் அதிகம் உள்ளனர். இதில் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளை தவிர அதிகமான ஆடு, மாடு வளர்ப்போர் அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களை சார்ந்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக போதிய மழை இல்லாததால் ஆடு மாடுகளுக்கு காட்டுத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வீடுகளிலோ அல்லது பண்ணைகளிலோ ஆடு மாடுகளை வளர்க்கும் போது அதிகமான தீவனச் செலவுகளை குறைப்பதற்காகவும் நாட்டு மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்போர் இத்தகைய மேய்ச்சல் நிலங்களையே நம்பி வாழ்கின்றனர். அடிவாரப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதிக்குள் வனத்துறையினர் செல்ல அனுமதிக்காததால் வனத்தை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்கள் அளவிலேயே மட்டும் இவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்கின்றனர். ஆனால் தற்போது மழையின்மை காரணமாக மேய்ச்சல் நிலங்களில் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. நிலம் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பாலும் மேய்ச்சல் நிலங்களுக்கு நீர் வரத்து இல்லாமல் காய்ந்து போன நிலையில் உள்ளன. எனவே கால்நடை வளர்ப்போர் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.