மழை வெள்ளத்தில் சேதமடைந்த ஓடையை சீரமைக்க கோரிக்கை
தேவதானப்பட்டி, மார்ச் 10: தேவதானப்பட்டி முருகமலையில் தெற்கு நோக்கி 100க்கும் மேற்பட்ட ஓடைகள் செல்கிறது. பருவமழை காலங்களில் முருகமலையில் பலத்த மழை பெய்தால் இந்த ஓடைகளில் வெள்ளபெருக்கு ஏற்படும். இந்நிலையில் நடப்பாண்டில் பருவமழை பெய்யும்போது இந்த ஓடைகளில் அதிகளவு வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஓடைகள் உடைந்து சேதமானது. இதில் டி.வாடிப்பட்டியில் இருந்து எருமலைநாயக்கன்பட்டி, கதிரப்பன்பட்டி கருப்பசாமி கோவில், சில்வார்பட்டி வழியாக ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் செல்லும் ஓடை, கதிரப்பன்பட்டி கருப்பசாமி கோவிலை கடந்து பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சில விவசாய கிணறுகள் தண்ணீரில் மூழ்கின. தற்போது வரை அந்த ஓடை உடைப்பு சரிசெய்ய வில்லை. கோடை மழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் ஓடை உடைப்பு வழியாக தண்ணீர் புகுந்து சாகுபடி பயிர்கள் பாதிப்படையும். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.