ஆண்டிபட்டி அருகே கோயிலை சேதப்படுத்தியவர்கள் கைது
ஆண்டிபட்டி, பிப். 22: ஆண்டிபட்டி அருகே கோயிலில் கற்களை வீசி சேதப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கோவில் அருகே அமர்ந்திருந்த சில இளைஞர்கள் கோயில் உண்டியலை சேதப்படுத்தியதாகவும், இதனை ஊர் பெரியவர்கள் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் மணியாரம்பட்டி கிராமத்திற்குள் வந்தனர்.
மேலும் காளியம்மன் கோவிலின் மீது கல்வீசி தாக்கி, கோவிலில் முன்பக்கம் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் நாட்டாமை சங்கரநாராயணன்(84) ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த ரூபன்(26), திஷோன்(20), இளையா(24), ரகு(32) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.