தாய்ப்பால் வழங்குவதால் தாயின் அழகு ஒருபோதும் குறையாது * உலக தாய்ப்பால் வார விழா ஆலோசனை
‛குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் தாயின் அழகு ஒருபோதும் குறையாது,.’ என தேனி மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை முதன்மை உதவி பேராசிரியை டாக்டர் வித்யாதேவி தெரிவித்தார்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமம் சார்பில், என்.ஆர்.டி., நர்சிங் கல்லுாரியில் உலக தாய்ப்பார வார விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பொன்விஜய்ஆனந்தராஜ் தலைமை வகித்தார். இணைப் பேராசிரியை சுபஸ்ரீ வரவேற்றார். தேனி மருத்துவக் கல்லுாரி முதன்மை உதவி பேராசிரியைகள் டாக்டர் வசந்தமலர், டாக்டர் வித்யாதேவி தாய்ப்பால் வார விழா நோக்கம் குறித்து விளக்கினர்.
டாக்டர் வித்யாதேவி பேசியதாவது: பிரசவித்த தாய்மார்கள் ‛நான் என் குழந்தைக்கு முழுமையாக பால் கொடுப்பேன்’ என்ற ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பச்சிளங்குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குவதை காட்டிலும் சிறந்த உணர்வாகும். சில தாய்மார்கள் இடது, வலதுப்புற மார்புகளில் மாற்றி, மாற்றி பால் கொடுக்கின்றனர். இது முற்றிலும் தவறு. காலை 7:00 மணிக்கு இடது மார்பில் கொடுத்தால், அடுத்த முறை 9:00 மணிக்கு வலது மார்பு என மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் மார்பில் பால் கட்டுவதை தவிர்க்கலாம். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கார்ப்போ ஹைட்ரேட் புரோட்டின் தேவையான அளவு, ‛விட்டமின் கே, விட்டமின் டி’யை தவிர பிற சத்துக்கள் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளதால் குழந்தையின் வளர்சிதை மாற்றங்கள் அபிரிமிதமாக இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் அழகுக்கு ஆபத்து ஏற்படாது. மாறாக ஒல்லியாக அழகாக மாறிவிடுவீர்கள். கூடுதல் உடல் பருமன் ஏற்படாது.’, என்றார். உதவி பேராசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.