தோட்டக்கலை துறைக்கு விவசாயிகள் கோரிக்கை : மானிய விலையில் நாட்டு வெற்றிலைக் கொடிகள் வழங்க… வலியுறுத்தல்:
சின்னமனுார்: ‘மானிய விலையில் நாட்டு வெற்றிலை கொடிகளை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெற்றிலையில் சிறுமேனி என்ற ஒட்டுரகம் தோட்டக்கலைத்துறை மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரியகுளம், மதுரை மாவட்டம் பரவை பகுதிகளில் மட்டுமே தற்போது சிறுமேனி பயிரிடப்படுகிறது. குறைவான செலவு, குறைவான மகசூல் தரும். அதன் வாசனையும் திருப்திகரமாக இருக்காது. மேலும் பறித்த 3 நாட்களுக்கும் மேல் தாங்காது. மாறாக நாட்டு வெற்றிலைக் கொடிகளில் இருந்து கிடைக்கும் வெற்றிலை ஒரு வாரத்திற்கு இருப்பு வைக்கலாம். மருத்துவ குணம் கொண்டது. செலவு அதிகமாகும். 4 சென்ட் நிலத்தில் 20 கிலோ வரை பறிக்கலாம். ஆனால், சிறுமேனி கொடியில் 8 கிலோ மட்டுமே பறிக்க முடியும்.
வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், ‘திண்டுக்கல் அருகே பஞ்சம்பட்டியில் இருந்து ஒரு கொடி ரூ.3க்கு வாங்கி, போக்குவரத்துச் செலவு ரூ.2 செலவழித்து, நாட்டு வெற்றிலைக் கொடிகளை வாங்கி வந்து சாகுபடி செய்கின்றனர். நாட்டு வெற்றிலை எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பலாம். சிறுமேனி உள்ளூர் விற்பனை மட்டுமே செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாது. நாட்டு வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே வரும் காலங்களில்பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு வெற்றிலை கொடிகளை வளர்த்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.