12 காட்டுப் பன்றிகள் லாரி மோதி உயிரிழப்பு
பெரியகுளம், : இரை தேடி ரோட்டை கடக்க முயன்ற 10 குட்டிகள் உட்பட 12 காட்டுப்பன்றிகள், லாரி மோதியதில் பலியாகின.
தேனி மாவட்டம், பெரியகுளம், முருகமலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. தேவதானப்பட்டி வனத்துறைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் சிறுத்தை, காட்டுமாடு, காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளன.
எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட எண்டப்புளி, எ.புதுப்பட்டி, இ.புதுக்கோட்டை பகுதிகளில் கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் இரைக்காக திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு பெரியகுளம், தேவதானப்பட்டி ரோடு பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வனப்பகுதியில் இருந்து இரை தேடி ரோட்டை கடக்க முயன்ற 10 குட்டிகள் உட்பட 12 காட்டுப்பன்றிகள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில், 12 காட்டுப்பன்றிகளும் இறந்தன.
அப்பகுதி இருட்டாக இருந்ததால், அடுத்தடுத்த வாகனங்கள் இறந்த பன்றிகள் மீது ஏறிச் சென்றன. டூ – வீலரில் சென்றவர்கள் தகவலின்படி, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.