ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி த ம்பதி மீது வழக்கு
போடி, டிச. 16: போடி அருகே, ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம், வினோபாஜி காலனியை சேர்ந்த முத்துராஜா மகன் கவுதம் கிருஷ்ணா(29). இவர் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்த பாண்டியராஜ், அவரது மனைவி தீபா ஆகியோர் முத்துராஜாவிடம் உங்களது மகனுக்கு சென்னை நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கடந்த 3 ஆண்டுளுக்கு முன்பு கூறியுள்ளார்.
இதை நம்பிய கவுதம் கிருஷ்ணா 2 தவணைகளாக மொத்தம் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து சில நாட்களில் அந்த தம்பதியர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்ததால் கவுதம் கிருஷ்ணா அதிர்ச்சியடைந்தார். மேலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின்பேரில் போடி தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரணை நடத்தினார். இதையடுத்து பாண்டியராஜ், தீபா ஆகியோர் மீது போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.