நகராட்சியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டித்தும், வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சி கடைகளுக்கும் பூட்டு போட்டனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் பல இடங்களில் முறையாக அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு பெற்றிருப்பதை நகராட்சியில் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்தது.
இந்த முறையற்ற இணைப்பு வைத்திருந்தவர்களுக்கு முறைப்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கினர். அதில் 30 பேர் இணைப்புக் கட்டணம் செலுத்தினர்.
பெரியகுளம் ரோடு, என்.ஆர்.டி., நகர், பழைய டி.வி.எஸ்., தெருக்களில் முறையற்ற, நீண்ட வரி பாக்கி உள்ள குடிநீர் இணைப்புகளை கமிஷனர் ஏகராஜ் முன்னிலையில் துண்டித்தனர்.
மேலும் கிழக்கு சந்தை பகுதியில் நகராட்சி கடைகளுக்கு சரிவர வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு பூட்டு போட்டனர்.
இதுவரை 45 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன், வருவாய் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.