மெகா மக்கள் நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த, ‘மெகா லோக் அதாலத்’ அமர்வுகளில் நிலுவையில் இருந்த பல வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
இந்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அமர்வுக்கு உத்தமபாளையம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், விரைவு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் முருகேசன், முகமது உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு பெறும் 15 வழக்குகளில் ரூ.12.60 லட்சம், அசல் – மேல்முறையீட்டு வழக்குகளில் ரூ.21.13 லட்சம், ‘செக்’ மோசடி, புரோ நோட் வழக்குகளில் ரூ.7 லட்சம், பிணை கைதிகள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்திய வகையில் ரூ.18 லட்சத்து 51 ஆயிரத்து 800, வங்கிகளின் வாராக்கடன் வழக்குகளில் ரூ.30 லட்சத்து 54 ஆயிரத்து 900 என, மொத்தம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 81 ஆயிரத்துக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இளநிலை உதவியாளர் சசிதர் செய்திருந்தார்.