மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்குவதில்… இழுபறி: இடம் தேர்வு செய்தும் தற்காலிக வகுப்பு துவக்காமல் தாமதம்
தேனி: தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்க இடத்தேர்வு, தற்காலி வகுப்பறைகள் தேர்வு செய்த நிலையில் திட்டம் செயல்படுத்துவதுதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. வரும் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்காததால் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 2024 டிசம்பர் 6, 7ல் டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் நாடு முழுவதும் 85 கேந்திர வித்யாலயா பளளிகள் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி, தேனி மாவட்டத்தில் தேனி நகராட்சியில் பள்ளி துவக்க ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
தேனி மாவட்ட முன்னாள் கலெக்டர் பல்லவி பல்தேவ் பணிக்காலத்தில் இப்பள்ளிக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. இதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கேந்திர வித்யாலயா சங்கதன் அதிகாரிகள், முன்னாள் கே.வி., பள்ளி முதல்வர் ஜெரால்டு ஆய்வு செய்தும் இடம் தேர்வு செய்தனர். தேனி வடவீரநாயக்கன்பட்டியில் 8 ஏக்கர் நிலத்தை பள்ளி நடத்த அரசு ஒப்புதல் அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் அல்லிநகரம் நகராட்சி பள்ளிக்கட்டடத்தில் தற்காலிகமாக வகுப்புகள் தயார் செய்தனர்.
புதிதாக வடவீரநாயக்கன்பட்டியில் துவங்கப்படும் இப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 950 மாணவர்கள் படிக்கவும், ஆசிரியர்கள், அலுவலர்கள் 63 நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கை துவங்கி உள்ளதாக முன்னாள் கலெக்டர் ஷஜீவனா, கேந்திர வித்யாலயா சங்கதன் மதுரை, சென்னை மண்டல அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு பின் தெரிவிததிருந்தார். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
காலதாமதம்:
முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கத்தினர் கூறுகையில், ‛தற்போது கேந்திரிய வித்யாலயா சங்கதன் நடப்பு கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் தேனி மாவட்டத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான முறையான அறிவிப்பு இன்னும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை. விரைவில் துவங்கினால் தேனி மாவட்டம் மக்கள் பயன் பெறுவர் என்றார்.