இடுக்கியில் மழை: தமிழக தொழிலாளி பரிதாப பலி
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கோடை மழையில் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், பாறை உருண்டு விழுந்து தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளி பலியானார்.
மாவட்டத்தில் ஒரு வாரமாக கோடை மழை தொடர்ந்து பெய்கிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.
நெடுங்கண்டம் அருகே துாக்குபாலம் பகுதியில் ஏற்பட்ட பலத்த இடி, மின்னலில் சசிதரன் என்பவரின் வீடு சேதமடைந்தது.
காஞ்சியாறு பகுதியில் வீசிய பலத்த காற்றில் ஜார்ஜ்குட்டி, மாத்யூ, சன்னி, மோனச்சன் ஆகியோரின் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நேந்திரபழ வாழை மரங்கள் சேதமடைந்தன.
எல்லக்கல், ராஜாக்காடு சாலையில் பாதுகாப்பு சுவர் இடிந்து சாலை சேதமடைந்தது. தொடுபுழா, புளியன் மலை மாநில நெடுஞ்சாலையில் அரக்குளம் பகுதியில் மரம் சாலையில் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.
ஏராளமான ரப்பர் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. அவற்றை மூலமற்றம் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இடுக்கி மாவட்டம், அய்யப்பன் கோவில் அருகே சுல்தான்யா பகுதியில் தனியார் ஏல தோட்டத்தில் தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் அய்யாவு, 59, கடந்த 11 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது பலத்த மழை பெய்தது. அதனால் ஏல தோட்டத்திற்குள் ஒதுங்கி இருந்தவர் மீது மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறை விழுந்து, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.