குப்பை கிடங்கை மாற்ற பா.ஜ., வலியுறுத்தல்
கூடலுார்; கூடலுாரில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டுமென பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நேரில் பார்வையிட்டு வலியுறுத்தினர்.
கூடலுாரில் உள்ள 21 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை, குடியிருப்புகளை ஒட்டியுள்ள பெத்துக்குளம் பகுதியில் கொட்டப்படுகிறது. மலை போல் தேங்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை சுவாசக் கோளாறு இருப்பவர்களை வெகுவாக பாதிக்க செய்தது. இதனால் குப்பை கிடங்கை மாற்றக்கோரி சமீபத்தில் பா.ஜ., வினர் கூடலுார் பெட்ரோல் பங்க் அருகே மாநில நெடுஞ்சாலையில் ரோடு மறியல் செய்தனர். உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் கலைந்து சென்றனர். ஆனால் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காததால் கலெக்டருக்கு புகார் மனு வழங்கினர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் குப்பை கிடங்கை நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விபரம் சேகரித்தனர். நகரத் தலைவர் சந்தனகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயராமன், இளைஞரணி செயலாளர் மனோஜ், முன்னாள் நகரத் தலைவர் முருகேசன், செயலாளர் சுப்பிரமணி, துணைத் தலைவர் குணா உடன் இருந்தனர்.