நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி: 61 இடங்களில் நடந்தது
தேனி : மாவட்டத்தில் 61 இடங்களில் நிலப்பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடந்தது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மேகமலை புலிகள் காப்பகத்தினர், கல்லுாரி மாணவர்கள் என 235 பேர் பங்கேற்றனர்
தமிழகத்தில் நீர்நிலை, நிலப் பறவைகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடந்தது. நேற்று நிலப்பறவைகள் கணக்கெடுப்புப் பணி காப்பு காடுகள், நகர் பகுதிகள், ஊரக பகுதிகளில் நடந்தது. மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 26 இடங்கள், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சார்பில் 35 இடங்கள் என 61 இடங்களில் இப்பணிகள் நடந்தது. இந்த பணிக்காக தன்னார்வலர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் பயிற்சி வழங்கப்பட்டது. வனத்துறை சார்பில் ஆண்டிபட்டி ரேஞ்சர் அருள் கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைத்தார். இதில் கருஞ்சிட்டு, குண்டு கரிச்சான், பழுப்புக்கீச்சான், தவிட்டு குருவி, பனை உலவாரன், சின்னான், பச்சைக்கிளிகள், அரியவகை மரங்கொத்திகள், பல்வகை கழுகுகள் உள்ளிட்ட பறவை இனங்களின் எண்ணிக்கை குறிக்கப்பட்டன.