‘மா’ வில் இலைப்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
பெரியகுளம் : மா வில் இலைப்பேன், பறவைக்கண் அழுகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது
தேனி மாவட்டத்தில் 9,600 எக்டேர் பரப்பளவில் மா சாகுபடியாகிறது. வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் மா பூக்களில் இலைப்பேன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய பெரியகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி, துணை தோட்டக்கலை அலுவலர் சரவணன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன், தோட்டக்கலை கல்லுாரி பூச்சியியல்துறை பேராசிரியர்கள் முத்தையா, சுகன்யாகண்ணா, நோய்கட்டுப்பாட்டுத்துறை பேராசிரியர் விஜயசாமூண்டீஸ்வரி, பழவியல்துறை பேராசிரியர் முத்துலட்சுமி ஆகியோர் ‘வயலாய்வு’ மேற்கொண்டனர். விவசாயி மணிகார்த்திக் மா தோப்பு உட்பட பல்வேறு மாந்தோப்புகளில் கள ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: வெயில் தாக்கத்தால் மா மரங்களில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த மரங்களில் நீலம் மற்றும் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை தொங்கவிட்டு இலைப்பேன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இலைப்பேனின் இளம் குஞ்சுகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம், வேப்ப எண்ணெய் 2 சதவீதம் ஆரம்ப நிலையில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் தையாமீத்தாக்சான் 6 கிராம் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து பவர் ஸ்பிரேயர் மூலம் 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். அல்லது பப்ரோபெசின் 20 மி.லி., மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மேலும் மாவில் தோன்றும் பூ மொட்டு கருகுதல், பறவைக்கண் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஹெக்சகோணசோல் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லி., வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்., என்றனர்.-