குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தேனி : ‘மாவட்டத்தில் பள்ளி கோடை விடுமுறையில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.’ என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக அளவில் அதிக குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஆண்டிபட்டி, வருஷநாடு, பெரியகுளம், போடி வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் அதிக குழந்தை திருமணங்கள் நடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குழந்தை திருமணங்களால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகளே ஆவர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடிக்கும் மாணவிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த மாணவிகள் கருவுற்று, சிகிச்சைக்கு வரும் போது தான் குழந்தைகள் திருமணம் நடந்திருப்பது கண்டறியப்படுகிறது. இதனை தடுக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறையில் அதிகம்
பள்ளிகள் கோடை விடுமுறையான ஏப்., மே., மாதங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதனை கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தடுக்க முன்வர வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணம் நடக்காத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் எதிர்காலம், கனவுகள் சிதைக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் உடல் அளவில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் சூழல் உருவாகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.