போலி ஆவணம், ஆள்மாறாட்டம் ; 33 சென்ட் இட ம் மோசடி : 2 பேர் கைது
தேனி; தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் செய்து,பவர் பத்திரம் பதிவு செய்து மோசடி செய்த வழக்கில், மதுரை நேரு நகர் ஈஸ்வரன் 48, பெரியகுளம் மேல்மங்கலத்தை சேர்ந்த குருசாமி 67, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியகுளம் மேல்மங்கலம் பாலவிஜய் 40. இவர் காஞ்சிபுரம் செம்மஞ்சேரியில் வசிக்கிறார். இவரது அத்தை சுப்புலட்சுமி.
சென்னையில் வசிக்கிறார். பெரியகுளம் மேல்மங்கலம் கட்டத்தேவனிடம் தனது17 சென்ட் நிலம், வீட்டையும் கவனித்து வர பாலவிஜய் ஒப்படைத்தார்.
போலிநபர் மூலம்ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை தயாரித்து, பாலவிஜயின் 17 சென்ட் நிலத்திற்கு கட்டத்தேவன் பவர் பெற்று, காஞ்சிபுரம் அய்யம்பேட்டையை சேர்ந்த ரவிசங்கருக்கு விற்றார். பின்னர் சுப்புலட்சுமியின் மகன் சிவபாலனின் 16 சென்ட் நிலத்தையும் சேர்த்து, வேறு நபர் பெயரில் கிரையம் பதிந்தார்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் பாலவிஜய் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசைசெல்வன் விசாரித்தனர்.
கட்டத்தேவன் மீதும், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை பதிவு செய்ய உடந்தையாக இருந்த ரவிசங்கர், மதுரை நேரு நகர் ஈஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த மீனா, சிவக்குமார், மேல்மங்கலம் சப்பாணிமுத்து, சந்தனகருப்பையா, குருசாமி, மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த செல்வம் உட்பட 9 பேர் மீது மார்ச் 11ல் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். ஈஸ்வரன், குருசாமிஆகியோரை நேற்று கைது செய்து தேனி நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி,சிறையில் அடைத்தனர்.