தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்
தேனி : தேனியில் ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த 12 துறை அதிகாரிகளை கலெக்டர் அனுமதிக்காததால் அரங்கிற்கு வெளியே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
தேனி கலெக்டராக ரஞ்ஜீத்சிங் பிப்.,13ல் பொறுப்பேற்றார். மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பங்கேற்க வேண்டும். உதவியாளர்கள், பிற பணியாளர்களை அனுப்பக்கூடாது என அறிவுறுத்தி இருந்தார்.
திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் ஆய்வுக் கூட்டத்தில் கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி துறைவாரியாக தெரிவிக்க வேண்டும்.
நேற்று கலெக்டர்தலைமையில் காலை 9:00 மணிக்கு ஆய்வு கூட்டம் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.