குமுளியில் பஸ் வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் – அவதி ; மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
கூடலுார்: தமிழக கேரள எல்லையான குமுளியில் மாலையில் ஊர் திரும்பும் தோட்ட தொழிலாளர்கள் கூடுதல் பஸ் வசதியின்றி நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் குமுளி வழியாக கேரளாவில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு விவசாய பணிகளுக்காக பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று திரும்புகின்றனர்.
கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி பகுதிகளில் இருந்து ஜீப் மூலம் தொழிலாளர்களை அழைத்துச் சென்றாலும் பஸ்களில் சென்று திரும்பும் தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் குமுளியில் இறங்கி கேரள பஸ்களில் ஜக்குபள்ளம், பத்துமுறி, ஆனைவிலாசம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்கின்றனர். இவர்களுக்காக கேரளாவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகம் இயக்கப்படுகிறது.
பணி முடிந்து மாலை 4:00 மணிக்கு மேல் குமுளி வந்து அங்கிருந்து மீண்டும் கூடலுார், கம்பம் பகுதிக்கு செல்லும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் அதிகம் இருந்தாலும் அதில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதிப்பதில்லை.
அதனால் மாலை 4:00 மணிக்கு மேல் 6:00 மணி வரை டவுன் பஸ்களை அதிகமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.