வராகநதியில் ஆபத்தான உறைகிணறால் அச்சம்
மேல்மங்கலம் சின்ன முத்தையா கோயில் அருகே வராகநதியில் மூடப்படாத உறை கிணறு தொட்டியால் விபத்து அபாயம் உள்ளது.
பெரியகுளம் ஒன்றியம்,மேல்மங்கலம் சின்ன முத்தையா கோயில் தெரு படித்துறை அருகே வராகநதி செல்கிறது.
இந்தப் பகுதியில் மேல்மங்கலம் ஊராட்சிக்கு முந்தைய காலங்களில் வராகநதி மைய பகுதியில் 10 அடிக்கு உறை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் வராகநதி அக்கரையில் கிணறு வெட்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பழைய தொட்டியில் தண்ணீர் எடுப்பது இல்லை. தொட்டியும் மூடாமல் உள்ளது. வராகநதியில் தண்ணீர் செல்லும் போது குளிப்பவர்கள் இந்த தொட்டியில் சிக்கி திணறுகின்றனர்.
இருவர் இறந்துள்ளனர். ஆபத்தான பயன்பாடு இல்லாத தொட்டியை மூட கிராம சபை கூட்டங்களில் பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகம், பொதுப் பணித்துறையினர் இந்த ஆபத்தான தொட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-