திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்டம் விழிப்புணர்வு
ஆண்டிபட்டி: திண்டுக்கல் — குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழுவின் நடை பயணம் குறித்து ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கனவான – திண்டுக்கல் -குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23ல் தேனி முதல் திண்டுக்கல் வரை நடை பயணம் மேற்கொள்ள போராட்டக் குழு திட்டமிட்டுள்ளனர். நடை பயணத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். ஆண்டிபட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ரயில் பயன்படுத்துவோர் சங்க மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் – குமுளி அகல ரயில் பாதை திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பிட் நோட்டீஸ் விநியோகித்தனர். நகர நிர்வாகிகள் முத்துப்பாண்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுப்பு, பாண்டியன், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.