துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை *- 4 முறை சுடப்பட்டதாக தகவல்
கூடலுார்:கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு அருகே வனத்துறையினர் சுட்டதில் பலியான புலிக்கு தேக்கடியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மயக்க ஊசி பலனளிக்காததால் புலியை சுட்டதாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளன
பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குவது அதிகரித்துள்ளது. சில நாட்களாக வண்டிப்பெரியாறு அருகே கிராம்பி குடியிருப்புகளில் புலி நுழைந்து பசு, நாய் உள்ளிட்ட வீட்டு விலங்குகளை வேட்டையாடியது. இரவில் மட்டுமல்லாது பகலிலும் இப்பகுதியில் உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். சமீபத்தில் புலியை கண்ட மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
தனிப்படை:
எருமேலி ரேஞ்சர் ஹரிலால் தலைமையில் தனிப்படை அமைத்து மக்களை அச்சுறுத்திய புலியை பிடிப்பதில் ஈடுபட்டனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதற்காக 4 தினங்களுக்கு முன் கூண்டு வைத்தனர். ஆனால் இது பலன் அளிக்கவில்லை. பின் ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணித்து வந்தனர். இருந்தபோதிலும் 2 தினங்களுக்கு முன்பு அதிகாலை அரணக்கல் எஸ்டேட்டில் நாராயணன் என்பவரின் பசுவையும், பாலமுருகன் என்பவரது நாயையும் அடித்துக்கொன்றது.
வனத்துறையினர் எடுத்த பல்வேறு முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கள இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட ‘வைபர்’ குழு தேக்கடியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இக்குழுவினர் ட்ரோன் கேமரா மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இடையூறு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இடுக்கி கலெக்டர் அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்தார். இரண்டு குழுக்களாக பிரிந்து புலியின் இருப்பிடத்தை நெருங்கினர். புலியை பார்த்த குழுவினர் மயக்க ஊசியை செலுத்தினர். ஆனால் சுதாரித்துக் கொண்ட புலி ஓடியது. இரண்டாவது முறையாக மயக்க ஊசியை செலுத்தியபோது புலி வனத்துறையினரை நோக்கி தாக்கப் பாய்ந்தது.
நான்கு முறை சுட்டனர்:
வனத்துறையினரை தாக்க வந்த நிலையில் குழுவினர் புலியை தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். நான்கு முறை சுடப்பட்ட பின் புலி இறந்தது. தேக்கடி ராஜீவ் காந்தி அறிவியல் மையத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நடைமுறைப்படி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மயக்க ஊசி பலனளிக்காததால் துப்பாக்கியால் சுட்டதாகவும் கோட்டயம் வன அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனைக்கு பின் தேக்கடியில் அடக்கம் செய்யப்பட்டது.
வயதானதால் குடியிருப்புகளை சுற்றிய புலி:
பலியான 10 வயதுடைய பெண் புலிக்கு முன்பக்க காலில் காயம் இருந்துள்ளது. பற்கள் அதிகமாக சேதம் அடைந்திருந்தது. வயது முதிர்வால் வனப்பகுதிக்குள் சென்று வேட்டையாட முடியாத நிலையில், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி வீட்டு விலங்குகளை வேட்டையாடி வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.