ஆண்டிபட்டி அருகே நாழிமலையில் தீ வைக்கும் மர்மநபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆண்டிபட்டி, பிப்.19: ஆண்டிபட்டி அருகே, நாழிமலை பகுதியில் தீ வைக்கும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள நாழிமலை மலைப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன், 7 இடங்களில் தீப்பற்றி இரவு முழுவதும் எரிந்தது. பின்னர் அதிகாலையில் ஏற்பட்ட பனியின் தாக்கத்தால் தீ கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் பகலில் மர்மநபர்கள் நாழிமலை வனப்பகுதியில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு பகுதிகளில் காட்டு தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே காட்டுத் தீ பற்றிய இடங்களில் இருந்த கங்குகளையும் அணைத்தனர். இதில் மலைப்பகுதியில் ஏராளமான மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த நிலையில் தீயை முழுவதுமாக அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினருக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியில் மீண்டும் காட்டு தீ பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.