Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத் தாக்கில் விவசாயிகள் ஆர்வம் : நிலையான வருவாய் கிடைப்பதால் மாவட்டத்தில் திராட்சை, வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு

கம்பம்: திராட்சை, வாழை சாகுபடியில் உறுதி செய்யப்பட்ட வருவாய் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இச் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடியாகும் என்ற தகுதியை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது.

இதற்கு காரணம் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மழை, மண்ணின் வளமாகும். இந்தியாவில் ஏற்றுமதி ரகங்களையும், ஒயின் ரகங்களையும் சாகுபடி செய்யும் புனேயில் கூட ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே நடைபெறுகிறது.ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு 3 அறுவடை செய்கின்றனர். இதுவிவசாயிகளுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் உள்ளது.சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கம்பம், கூடலூர், அணைப்பட்டி, ராயப்பன்பட்டி போன்ற ஊர்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சையும் சாகுபடி குறைந்து அங்கேயும் பன்னீர் திராட்சைக்கு மாறி உள்ளனர். தற்போது பனி காலமாக இருந்த போதும் விலை கிலோவிற்கு ரூ.30 க்கு மேல் கிடைத்து வருகிறது. கம்பம் பகுதியில் ஆயிரம் எக்டேர்,

சின்னமனூர் வட்டாரத்தில் 1300 எக்டேர், உத்தமபாளையம் வட்டாரத்தில் 300 எக்டேரில் திராட்சை சாகுபடியாகிறது. சமீபமாக திராட்சை சாகுபடி பரப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே போன்று மாவட்டம் முழுவதும் பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது செவ்வாழை, நாழிப்பவன் என அனைத்து ரகங்களும் கிலோ ரூ.80 க்கு மேலும் கிடைத்து வருகிறது. சாகுபடி பரப்பும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் திராட்சை சாகுபடியாளர்கள் வாழைக்கும், வாழை சாகுபடியாளர்கள் திராட்சைக்கும் அடிக்கடி மாறி கொள்வார்கள். இதனால் இரு

பயிர்களும் சாகுபடி பரப்பில் மாவட்டத்தில் முன்னிலை பெறுகிறது.

இது தொடர்பாக திராட்சை, வாழை சாகுபடியாளர்கள் கூறுகையில், மகசூல் குறைவு, விலை இல்லாதது என இருந்தாலும் , உறுதி செய்யப்பட்ட வருவாய் கிடைக்கும். எனவே சமீபமாக கம்பம் பள்ளத்தாக்கில் 30 முதல் 40 சதவீதம் பரப்பு அதிகரித்துள்ளது. நிலையான வருவாய் என்ற அம்சம் காரணமாகவே திராட்சை,வாழை மகசூல் பரப்பு அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *