பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு
போடி: பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்கள், கட்டடங்களையும் 15 நாட்களுக்குள் அகற்ற போடி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள், கட்டடங்கள் அகற்ற அனைத்து உள்ளாட்சி அதிகாரகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி போடி நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பம், கட்டடங்களை அகற்றுவதற்கான அனைத்து கட்சி நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் பார்கவி தலைமையில் நடந்தது.
மேலாளர் முனிராஜ், கட்டட ஆய்வாளர் சுகதேவ் முன்னிலை வகித்தனர். தி.மு.க., அ.தி.மு.க., காங்., அ.ம.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கட்சி கொடிக்கம்பம், கட்டடங்களை கட்சியினர் 15 நாட்களுக்குள் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்படும். இதனால் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்படும் என கட்சி நிர்வாகிகளுக்கு நகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.