உடல் உறுப்புகள் தானம் பதிவு முன் மாதிரியான கல்லுாரி மாணவி
மூணாறு: மூணாறைச் சேர்ந்த கல்லூரி மாணவி முதன்முதலாக உடல் உறுப்புகளை தானம் பதிவு செய்து முன்மாதிரியானார்.
மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பழனி, மல்லிகா தம்பதியரின் மகள் ஹேம தர்ஷினி 20. இவர், எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார்.
கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன.
அதனை தவிர்த்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரியில் என்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கேரள கல்லீரல் அறக்கட்டளை தலைமையில் உடல் உறுப்புகள் தானம் பதிவு முகாம் நடந்தது. அதில் இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஹேமதர்ஷினி பதிவு செய்தார். அதற்கு எழுத்து பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.
அவர்கள் மகளின் துணிச்சலான முடிவை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். தமிழரான மாணவி ஹேமதர்ஷினி மூணாறு பகுதியில் முதன்முதலாக உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்து முன்மாதிரியானதுடன் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.