சின்னமனுாரில் இரண்டாம் போக நெல் அறுவடை பம்பர் மகசூல்; கொள்முதல் நிலையம் திறக்காமல் அலைக்கழிப்பு
கம்பம் : சின்னமனுார் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடையில் பம்பர் மகசூல் கிடைத்துள்ளது. நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக கூறி அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தில் நடைபெறும் நெல் சாகுபடியில் இந்தாண்டு இரண்டாம் போகம் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.
சின்னமனுார் வட்டாரத்தில் சீலையம்பட்டி மார்க்கையன்கோட்டை, குச்சனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.என்.ஆர். ரகம் ஏக்கருக்கு 46 முதல் 50 மூடைகள் கிடைத்து வருகிறது.
ரகத்தில் மகசூல் கொஞ்சம் குறைவாக கிடைத்தாலும் திருப்தியாக உள்ளது. இதே ஆர்.என்.ஆர். ரகம் கம்பத்தில் மகசூல் குறைவாக கிடைத்துள்ளது. கம்பத்தை பொறுத்தவரை பல ரகங்கள் சாகுபடி செய்யப்படுள்ளன.
இந் நிலையில் விலை கடந்தாண்டை விட மூடைக்கு ரூ.100 வரை குறைவாக கிடைத்து வருகிறது. தற்போது ரூ.1400 வரை கிடைக்கிறது. கடந்தாண்டு ரூ.1500 வரை விலை கிடைத்தது.
இது குறித்து கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கம்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக கூறி அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்கின்றனர். கொள்முதல் நிலையம் திறக்க விண்ணப்பம் தாருங்கள் என்றனர். பின் எவ்வளவு நெல் வரும் என கேட்கின்றனர். இது வியாபாரிகள் நெல் போன்று உள்ளது என்கின்றனர். மொத்தத்தில் கொள்முதல் நிலையம் திறக்காமலேயே விவசாயிகளை அலைய விடுகின்றனர். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் கேட்டால் திறப்பதற்கான உத்தரவில் கையெழுத்து போட்டுவிட்டேன் என்கிறார். மண்டல மேலாளர் எவ்வளவு கொள்முதல் செய்துள்ளார் என்பதை அறிவிக்க முடியுமா.. விவசாயிகளை ஏமாற்றும் வேலைகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர்ந்து செய்துவருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்றனர்.இதற்கிடையே சின்னமனூரில் விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.