திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோட்டில் தொடரும் விபத்துக்கள் ரோடு சந்திப்புகளில் வெளிச்சம், அகலமான ரவுண்டான இன்றி அவதி
தேனி,: தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோடு 91 கி.மீ., துாரம் அமைந்துள்ளது. இந்த பைபாஸ் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் இணையும் பகுதியில் போதிய வெளிச்சம், தடுப்புகள் இன்றி உள்ளதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ரோடு மாவட்டத்தின் எல்லையான பரசுராமபுரத்தில் பகுதியில் துவங்கி கீழக்கூடலுார் வரை 28 கிராமங்கள் வழியாக செல்கிறது. இதில் பல இடங்களில் கிராம சாலைகள் பைபாஸ் ரோட்டில் இணைகின்றன. இந்த சந்திப்புகளில் இரவில் போதிய அளவு வெளிச்சம் இல்லை. அதே போல் சாலையின் இரு புறமும் எதிரொளிப்பான்கள் (ரிப்ளக்டர்கள்), தடுப்புகள் இல்லை. ஒன்றிரண்டு பகுதிகளில் இருப்பதையும் சரிவர பராமரிப்பதில்லை. பைபாஸ் ரோடுகளில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பல இடங்களில் பழுதாகி ஒன்றிரண்டு விளக்குகள் மட்டுமே பளிச்கிடுகிறது. சோலார் சிக்கனல்கள் பல இடங்களில் பழுதாகி உள்ளன. இதனால் இரவில் சிக்கனல்கள் அறிய முடியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.
கிராமங்களில் இருந்து பை பாஸ் ரோட்டில் குறுக்கே செல்பவர்கள் விபத்துக்களில் சிக்குவது தொடர்கிறது. இந்த ரோட்டில் ஆண்டு தோறும் நவ., டிச., ஜன., மாதங்களில் அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம் செய்கின்றனர். இந்த மூன்று மாதங்களில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
பைபாஸ் ரோட்டில் குறிப்பாக எண்டபுளி – தேனி மதுராபுரி விலக்கு, மதுராபுரி விலக்கு- போடி சந்திப்பு, வீரபாண்டி, கோட்டூர் பகுதிகளில் அதிக அளவு விபத்துகள் நடக்கிறது. போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததது, சாலை சந்திப்புகள் பற்றி பை பாஸ் ரோட்டில் முன்னறிவிப்பு இல்லாததது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகும். பொது மக்கள் கருத்து:
ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டும்
ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகி, ஹிந்து எழுச்சி முன்னணி, தேனி : பைபாஸ் ரோட்டில் கிராம பகுதி ரோடுகள் சந்திக்கும் இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை. மேலும் இந்த சந்திப்புகள் இருப்பது பை பாஸ் ரோட்டில் வரும் பலரும் தெரியாத நிலை உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது. ரோடுகள் சந்திப்பு இடத்தில் ரோட்டை அகலப்படுத்தி போதிய அளவில் மின் விளக்குகள், ரவுண்டானா அமைக்க வேண்டும். சந்திப்புகளில் இருந்து இருபுறமும் 100 மீட்டர் முன்பு பேரிகார்டுகள் வைக்க வேண்டும். இதன் மூலம் பைபாசில் வாகனங்கள் வேகத்தை குறைக்கும் விபத்துக்களை தவிர்க்கலாம்.
குறுகிய பாலங்களால் விபத்து
ராமராஜ், தேவதானப்பட்டி : மாவட்டத்தில் இந்த பை பாஸ் ரோடு துவங்கும் காட்ரோடு பகுதியில் இருந்து பெரியகுளம் வரை மூன்று இடங்களில் குறுகிய பாலங்கள் உள்ளன. புதிதாக கார், வேன் ஓட்டி வரும் டிரைவர்கள் இந்த பகுதியில் வரும் போது தடுமாறி பதட்டம் அடைந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. குறுகிய பாலங்களை அகலப்படுத்த வேண்டும். நகர்பகுதிக்குள் செல்லும் ரோடுகள் இணையும்பகுதியில் உள்ள வசதிகள் போன்ற மற்ற இடங்களிலும் ஏற்படுத்தினால் விபத்துக்களை குறைக்கலாம்.
தீர்வு…
பேரிகார்டுகளுக்கு இடையே
போதிய இடைவெளி தேவை
இந்த ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர் பராமரிப்பில் ஈடுபட வேண்டும். ரோட்டோரம் வளர்ந்துள்ள புற்கள், படிந்துள்ள மணலை முறையாக அகற்ற வேண்டும். ரோடு சந்திப்பு பகுதிகளுக்கு அருகே போலீசார் பேரிகார்டுகள் வைக்க வேண்டும். அனைத்து சிக்னல்கள் விளக்குகள் பளிச்சிட வேண்டும். போலீசார் ஒரு இடத்தில் அருகருகே பேரிகார்டுகள் வைக்காமல் பெரிய சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் பேரிகார்டுகளை குறிப்பிட்ட இடைவெளி விட்டு வைக்க வேண்டும். விபத்துப்பகுதிகளை ஆராய்ந்து அப்பகுதியில் ரோட்டினை அகலப்படுத்த வேண்டும்.