கைத்தறி, பெடல் தறிகளில் அரசின் இலவச சேலை உற்பத்திக்கு இலக்கு
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி, டி.சுப்பலாபுரம் பகுதியில் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 49 ஆயிரம் இலவச சேலைகள் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 7 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கங்களில் 270 பெடல் தறிகளும், 150 கைத்தறிகளும் உற்பத்தியில் உள்ளன. தமிழக அரசு மூலம் கடந்த ஆண்டு தைப்பொங்கல் கொள்முதலுக்குப்பின் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சேலைகள் உற்பத்திக்கான உற்பத்தி திட்டம் வழங்கப்படவில்லை. இதனால் நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மார்ச், ஏப்ரல் மாதங்களில் 49 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான உற்பத்தி திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் கூறியதாவது: உற்பத்தி திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே இருப்பில் இருந்த நூல் மூலம் சேலைகள் உற்பத்தி தொடர்ந்தது.
இந்நிலையில் இரு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உற்பத்தி திட்டம் நெசவாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.
பெடல் தறிகள் மூலம் 40 ஆயிரம், கைத்தறிகள் மூலம் 9 ஆயிரம் சேலைகள் உற்பத்திக்கான நூல் வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் கூட்டுறவு சங்கங்களில் துவங்கியுள்ளது என்றனர்.