போடி வனப்பகுதியில் காட்டுத்தீ மரங்கள் எரிந்து சேதம் மழையால் வனத்துறையினர் நிம்மதி
போடி, : போடி அருகே சூலப்புரம் மேற்கே உச்சலூத்து வனப்பகுதியில் பற்றிய தீ நேற்று மாலை பரவி பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதமாயின. இச் சூழலில் பெய்த கன மழையால் தீ அணைந்தது. இதனால் வனத் துறையினர் நிம்மதி அடைந்தனர்.
போடி அருகே உத்தமபாளையம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிங்காபுரம், சூலப்புரம் மேற்கே உச்சலுாத்து மலைப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இங்கு உள்ள மரங்களுக்கு சமூக விரோத கும்பல் தீ வைத்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நீர் நிலைகளை தேடி வன விலங்குகள் மலை அடிவார பகுதிக்கு வர துவங்கி உள்ளன.
நேற்று மாலை சூலப்புரம் கன்னிமார் கோயில் மேற்கே உச்சலுாத்து வனப் பகுதியில் சமூக விரோதிகள் வைத்த தீ யால் விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாயின. வன உயிரினங்கள் பலியாவதோடு, வன விலங்குகளும் இடம் பெயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்பகுதி மிகவும் பள்ளமான பகுதியாக உள்ளதால் தீயை முழுவதும் அணைக்க முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்தனர்.
ஒரு மணி நேரமாக காட்டுத் தீ பற்றி எரிந்த நிலையில் அப்பகுதியில் திடீர் என பெய்த கன மழையால் காட்டுத் தீ தானாக அணைந்தது. தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் மழையால் நிம்மதி அடைந்தனர்.