போடியில் தூய்மை பணி
போடி, மார்ச் 24: போடியில், மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றன. போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. சுமார் 1.10 லட்சத்திற்கும் அதிமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 33 வார்டுகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் அரசு உத்தரவின் படி, வாரம் ஒரு முறை ஒவ்வொரு வார்டாக தேர்வு செய்து, நகராட்சி சார்பில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து சுகாதார மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதன்படி போடி 8வது வார்டு நகர் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் பார்கவி முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் சுகாதாரம், தெரு விளக்கு, பாதாள சாக்கடை போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காணப்பட்டது.