Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

குழந்தைகள் நல சிகிச்சைத்துறை உதவி பேராசிரியர் ஆலோசனை: குழந்தைகளுக்கு வசம்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

தேனி: ‘பச்சிளங்குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து வழங்குவதை தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது.’ என தேனி அரசு மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நல சிகிச்சைத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் வே.முத்துப்பாண்டி தெரிவித்தார்.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறையின் கீழ் பச்சிளங்குழந்தைகள் நலத்துறை இயங்குகிறது. இங்கு எடை குறைந்த குழந்தைகள், பிரசவித்த பெண்களுக்கான ஆலோசனை, சிகிச்சைகள், தாய் சேய் நலம் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து உதவி பேராசிரியர் தினமலர் நாளிதழின் ‘அன்புடன் அதிகாரி’ பகுதிக்காக பேசியதாவது:

பச்சிளங்குழந்தை யார், தாய்ப்பால் எப்போது கொடுக்க வேண்டும்

தாய் பிரசவித்த குழந்தையின் முதல் 28 அல்லது 30 நாட்களுக்குள் உள்ள குழந்தைகளை பச்சிளங்குழந்தைகளாகும். தாய்ப்பால் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு நேர குறியீடு இல்லை. சிசேரியன் குழந்தை என்றால் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் வயிற்றில் செரிமான நடைமுறை முறையாக நடக்கும். குழந்தை ‘மோஷன்’ போக ஆரம்பிக்கும்.இதனால் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

தாய்ப்பாலின் ‘சீம்பால்’ பற்றி கூறுங்கள்பிரசவித்த தாயின் மார்பில் முதல் மூன்று நாட்களில் சுரக்கும் பாலுக்கு சீம்பால் என்கிறோம். இதனை அவசியம் குழந்தைகளுக்கு ‘ப்ரஸ்ட் ப்பீடிங்’ மூலமே வழங்க வேண்டும். சீம்பாலின் புரோட்டின், கொலுப்புசத்து மிக அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சத்துக்களும் அதிகமாக இருக்கும். இதைத்தவிர வேறுபால் கொடுத்தால் செரிமாணம் ஆகாது. மோஷன்’ வெளியேற காலதாமதம் ஏற்படும்.

தாய்ப்பால் கொடுக்கும் முறை குறித்து

சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள் அமர்ந்து கொடுக்கலாம். இதுவே சிறந்த முறையாகும். ஆனால் சிசேரியன்’குழந்தை பெற்ற தாய்மார்கள் எழுந்திருக்க முடியாத நிலை இருக்கும். அதனால் ஒருபக்க சாய்ந்து படுத்த நிலையில் கொடுக்கலாம். நர்சிங் உதவியுடன் மல்லாகக படுத்தும் வழங்கலாம். மிக முக்கியமாக பால் கொடுத்த பின் குழந்தை படுத்த நிலையில் இருக்கக்கூடாது. தோளில் வைத்திருக்க வேண்டும். இது 10 முதல் 15 நிமிடங்கள் வரை அல்லது குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை தோளில் போட்டு இளைப்பார வைப்பது அவசியம்.

நாள் ஒன்றுக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

பிரசவித்த தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு10 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 முறையாவது கொடுக்க வேண்டும். இதுதான் ஆரோக்கியம். முதல் ஒரு மாத குழந்தை 10 நிமிடம் தொடர்ந்து குடிக்கும்.ஒரு மாதத்திற்கு மேலுள்ள குழந்தை 20 நிடங்கள் குடிக்கும். அதன்பின் 9 மாதங்கள் வரை இந்த கால அளவில் மாற்றம் இருக்காது.

குழந்தை போதியளவு பால் குடித்ததை எவ்வாறு அறிவது

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின் நன்றாக 2 மணி நேரம் துாங்கும். அல்லது 6முதல் 8 முறை சிறுநீர் கழிக்கும். இவ்வாறு இருந்தால் பிரச்னை இல்லை என ஊர்ஜிதப்படுத்தலாம். இதில் எடை அதிகரிக்கும். தற்போது இருக்கும் எடையில் இருந்து வாரத்திற்கு 210 கிராம் அதிகரிக்கும். அதுபோல் நன்றாக குழந்தை பால் குடித்தால் மார்பில் பால் இல்லாத நிலையை மார்பக வீக்கம் குறைவதை தாயால் உணர முடியும். இந்த உணர்வு ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுத்து முடிக்கும் போதும் ஏற்பட வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதையும், குழந்தை பால் குடிப்பதையும் தாய் உறுதி செய்யலாம்.

பிரசவித்த தாய்மார்களுக்கு எப்போது பால் கொடுப்பது என்ற சந்தேகம் உள்ளதே

நிறைய தாய்மார்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. குழந்தை அழுத உடனே பால் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கான ஆரம்ப அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படும். அதாவது தாய்ப்பால்கொடுத்து 2 மணி நேரம் துாங்கிய பின், துாக்கத்திலேயே வாயை சுவைக்கும். கண் முழிக்கும், கை, கால் அசைக்க

ஆரம்பித்து விடும். நாக்கை வெளியே நீட்டி, நீட்டி சுவைக்கும். உடனே தாய் பால் கொடுக்க வேண்டும். ரொம்ப அழ விடக்கூடாது. இதனை ‘ஹங்கர் கிரை’ என்போம். இவ்வாறு அழும்போது அறையில் உள்ள காற்று வயிற்றுக்குள் சென்று அதீத பசி எடுக்கவிடக்கூடாது. அப்போது உடனே குழந்தை பால் குடிக்காது. பின் தாய் தோளில் போட்டுசமாதானப்படுத்தி அதற்கு பின் பால் கொடுகக வேண்டும்.

இதனால் ஆரம்ப அறிகுறிகளான உடம்பை முறுக்குது, வாயை சுவைத்தல், நாக்கை வெளியே நீட்டி, நீட்டி சுவைப்பது தெரிந்தால் பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பாலில் உள்ள மூலக்கூறுகள் என்ன

100 எம்.எல்., தாய்ப்பாலில் குளுக்கோஸ் 63 கிராம். புரோட்டின் 1.1 கிராம், மீதியுள்ள திரவநீராக இருக்கும். இதில் தானாக குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்றுக் கொண்டு விடும்.

பசும்பாலில் புரோட்டின் 3 கிராம் இருக்கும். ஆனால் குழந்தைக்கு செரிமாணம் ஆகாது. வீணாக வெளியே போக ஆரம்பிக்கும். கிரகிக்கும் தன்மை குறைவாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளாது. இதனால் பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் சுவாசம், ஆஸ்துமா, தோல் அலர்ஜி பிரச்னைகள் குழந்தைகளுக்கு வராது. வயிற்றுப்போக்கு பெரும்பாலும் வராது. அதேபோல் நுண்ணறியும் திறன் அதிகரிக்கும்.

தாய் சேய் உணர்வில் இருவருக்குமான பந்தம் ஏற்படுவது எப்போது

மூன்று வகை பராமரிப்பால் தாய் சேய் பாச உணர்வு ஏற்படும். இதனை பாண்டிங்’ பந்தம் என அழைப்போம்.இதனை மூன்று வகையாக பிரித்துள்ளோம். தாய் சேய் ஒரு படுக்கையில் இருப்பது. ஒரேஅறையில் இருப்பது. தொடு உணர்வுடன் தாய் பராபரிப்பது.

இந்த மூன்று வகை செயல்களால் அனிச்சை செயலாகவே இருவருக்குள்ளும் பந்தம் அதிகரித்துவிடும். குழந்தைக்கு தாய்க்கு அருகில் இருப்பதால் பய உணர்வுகள் ஏற்படாது.

நம்பிக்கையாக இருக்கும். தாய் தானாக குழந்தையை துாக்கி, பால் கொடுத்து துாங்க வைக்கும் போது, குழந்தைக்கு தாயின் வாசனை தெரியும். தாய்க்கு தொடு உணர்வு மூலம் பந்தம் அதிகரிக்கும்.

இதனை தாய்மார்கள் உணர்வு பூர்வமாக அறிய முடியும். அதனால்தான் பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தன்னையும் அறியாமல் கண்ணீர் வர இதுவும் காரணம்.

கே.எஸ்.சி.,கேர் பராமரிப்பு என்றால் என்ன

ஆஸ்திரேலியாவில் கங்காரு என்ற விலங்கினம் தனது குட்டிகளை வயிற்றுப்பகுதியில் உள்ள தோல் பையில் சுமந்து பாதுகாக்கும். இந்த முறையில் தாய் சேய் தோலோடு தோல் ஒட்டி குழந்தைகள் இருக்கும் வகையில் 2.5 கிலோவிற்கு குறைவாக உள்ள குழந்தைகள், 37 வாரங்களுக்கு குறைவாக பிறந்த குழந்தைகளை இதில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கிறோம்.

இதில் தாய்சேய் தோல்கள் ஒன்றோடு ஒட்டி இருப்பதால்குழந்தையின் உடல் வெப்பம் குறையாது. எடை குறையாது. தாய்க்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பால்சுரப்பும் அதிகமாகும். இதனால் கே.எம்.சி., கேர் சிகிச்சை பரவலாக்கப்ப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மேலும் முறையான நேரத்தில் அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்திட வேண்டும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை நன்றாக வளர்த்துவிட்டால் வாழ்நாள் முழவதும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்வார்கள்.

இது ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு செய்யும் தலையாய கடமையாகும். இதனால்தான் பிரசவித்த தாய்மார்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகின்றனர்.

வசம்பு அரைத்து குழந்தைக்கு கொடுககிறார்களே

முதலில் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். வசம்பு அரைத்து கொடுப்பது முற்றிலும்தவறு. இதனால் வயிற்றுப்போக்கு, இரவில் அதிக நேரம் இடைவிடாமல் குழந்தை அழுவதும் இதனால்தான்.அதனால்வசம்பை அரைத்து கொடுக்கக்கூடாது என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *