பொம்மை வியாபாரிகளால் போக்குவரத்திற்கு இடையூறு
ஆண்டிபட்டி: வெளி மாநில பொம்மை வியாபாரிகளால் ஆண்டிபட்டியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
வாகனங்களில் வந்த வெளி மாநில பொம்மை வியாபாரிகள் ஆண்டிபட்டியில் வியாபாரத்திற்காக முகாமிட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொம்மைகளை மொத்தமாக கம்புகளில் கட்டி ஆண்டிபட்டியில் மெயின் ரோட்டில் நெருக்கடியான இடங்களில் விற்பனை செய்தனர்.
கொண்டமாநாயக்கன்பட்டியில் இருந்து சக்கம்பட்டி வரை மெயின் ரோட்டில் திரும்பத் திரும்ப வந்து சென்றதால் பலருக்கும் இடையூறு ஏற்பட்டது.
திங்கட்கிழமை ஆண்டிபட்டியில் வாரச்சந்தை கூடுவதால் கிராமங்களில் இருந்து அதிகமானோர் ஆண்டிபட்டிக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்படும். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட பொம்மை வியாபாரிகள் ஆண்டிபட்டியில் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு செய்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலரும் சிரமப்பட்டனர். பொம்மை வியாபாரிகளை போலீசார் எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரம் செய்பவர்களை கட்டுப்படுத்த போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.