தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள்
தேனி : தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே தோப்பில் தேங்காய் திருடிய தொழிலாளியை கண்டித்த சக தொழிலாளியை கொலை செய்த அம்மாபட்டி இந்திராகாலனி ஜெகதீஸ்வரனுக்கு 41, ஆயுள் தண்டனை விதித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போடி அம்மாபட்டி இந்திராகாலனி முருகன் 56. இவர் சுந்தரபாண்டியன் தெரு டாக்டர் ராம்குமார் தென்னந்தோப்பில் தங்கி மாடுகளை பராமரித்து வந்தார். 2022 ஜனவரியில் தன் தெருவில் வசிக்கும் ஜெகதீஸ்வரனை 41, முருகன் பணிக்கு சேர்த்து விட்டார். அதன் பின் ஜெகதீஸ்வரன் தென்னந்தோப்பில் தானாக கீழே விழும் தேங்காய்களை திருடி, அதனை விற்று மது அருந்தி வந்தார். இதனை முருகன் கண்டித்தார்.
022 மார்ச் 31ல் வழக்கம் போல் தேங்காய்களை விற்று மது குடித்த ஜெகதீஸ்வரனை முருகன் எச்சரித்தார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகன், தோப்பின் உரிமையாளரிடம் கூறுகிறேன் என அலைபேசியை எடுத்தார். இதை தடுத்த ஜெகதீஸ்வரனுக்கும், முருகனுக்கும் மோதல் ஏற்பட்டது. முருகன் கீழே கிடந்த அரிவாளால் ஜெகதீஸ்வரனை தாக்கினார். ஆத்திரமடைந்த ஜெகதீஸ்வரன் முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பிறகு முருகனை கயிறால் கட்டி 100 அடி துாரம் உடலை இழுத்து சென்று கால்வாயில் போட்டு தப்பினார். குரங்கணி போலீசார் விசாரித்து ஜெகதீஸ்வரனை கைது செய்தார்.
இவ்வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார். ஜெகதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.