வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பசுக்கள் பராமரிப்பில் கவனம்
கம்பம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பசுக்களை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த கால்நடை பராமரிப்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.
ஏப்ரல், மே யில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் கூறி வருகின்றன.
கோடை காலத்தில் பசுக்கள் சரிவர தீவனம் உண்ணாது, தண்ணீர் சரிவர குடிக்காது என்பதால் பால் உற்பத்தி குறையும். கழிச்சல் இருக்கும். இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று கம்பம் கால்நடை பராமரிப்பு துறை டாக்டர் செல்வம் கூறியிருப்பதாவது:
கோடை வெயில் அதிகரித்து வருகிறது. பசுக்களை நல்ல காற்றோட்டமான இடத்தில் கட்டி வைக்க வேண்டும். அருகில் பக்கெட்டில் தண்ணீர் வைக்க வேண்டும்.
தேவைப்படும் போது குடித்துக் கொள்ளும். தவிடு கலந்த தண்ணீரை வைக்க கூடாது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வைப்பது நல்லது. அதிகாலை, மாலையில் தீவனம் வைக்கலாம். பகலில் தீவனம் சரியாக உண்ணாது. தண்ணீரும் குடிக்காது. கழிச்சல் ஏற்பட்டால் கால்நடை மருந்தகத்தில் அதற்கான சிகிச்சை பெறலாம். மாட்டு கொட்டத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இயல்பாகவே கோடையில் பால் குறையும்.
நமது பராமரிப்பு சரியாக இருந்தால், பால் குறைவதை ஓரளவிற்கு சரி செய்யலாம்.
எனவே பசுக்கள் பராமரிப்பில்கூடுதல் கவனம் செலுத்துங்கள் இவ்வாறு கூறியுள்ளார்.