அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் தரிசான அவலம் கோத்தலுாத்து விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாறிய பரிதாபம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து, அதிகாரி கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் 1000 ஏக்கரில் விவசாயம் பாதித்துள்ளது.
இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை நாகலாறு ஓடை, ருத்ராய பெருமாள் கோயில் மலைப்பகுதியில் இருந்து மழை நீர் கிடைக்கும். 300 ஏக்கர் பரப்புள்ள கொண்ட இக் கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லாததால் பல ஆண்டுகளாக கண்மாய்க்கு போதிய நீர் வரத்து இல்லை.
கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் 300 ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் நேரடி பாசனம் பெறும். 6 மாதத்திற்கு மேலாக கண்மாயில் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரமும் மேம்படும். பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக மாறிவிட்டன. விவசாய தொழிலை கைவிட்டு பலரும் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். கண்மாய் நிலவரம் குறித்து அரசு முழுமையாக ஆய்வு செய்து இப்பகுதியில் எஞ்சிய விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மழைநீரை மடைமாற்றுவதால் பாதிப்பு
கபிலன், கன்னியப்பபிள்ளைபட்டி: கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் பாதிப்பின்றி இருபோகம் விவசாயத்தை தொடர முடியும். கண்மாய் நீரால் எரதிமக்காள்பட்டி, எம்.சுப்புலாபுரம், மறவபட்டி, கோத்தலூத்து, கொப்பையம்பட்டி, மொட்டனூத்து, ஆசாரிப்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கண்மாயின் நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி உள்ளது. நாகலாறு ஓடையில் மழைக்காலத்தில் வரும் நீரை மடை மாற்றி வேறு கண்மாய்க்கு திருப்பி விடுகின்றனர். இதனால் அதிகாரி கண்மாய் பாதிப்படைகிறது. விவசாயம் பாதிப்பதால் அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழிலும் நசிவடைகிறது. இளைய தலைமுறையினர் பிழைப்புக்காக விவசாயத்தை கைவிட்டு வெளியூர் செல்கின்றனர்.
நீர் பற்றாக்குறையால் விவசாயம் கேள்விக்குறி
வி.காளிவேல், கோத்தலூத்து: நாகலாறு ஓடையில் இருந்து அதிகாரி கண்மாக்கு வர வேண்டிய நீர் கொத்தப்பட்டி புல்வெட்டி கண்மாய்க்கு செல்கிறது.
கதிர்நரசிங்கபுரம் அருகே மாட்டு பாலம் வழியாக முழு அளவில் கண்மாய்க்கு நீர் வந்து சேர்வதில்லை. இப்பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க வேண்டும். ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வர விவசாயிகள் 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராடுகின்றனர்.
இதுகுறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளமான மண் இருந்தும், தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் கேள்விக்குறியாகிறது. விவசாயம் மேம்பட்டால் தொழில் வளமும் மேம்படும். பிழைப்புக்காக வெளியூர் செல்லும் நிலை மாறும். இவ்வாறு கூறினர்.