எஸ்.பி ., ஆபீசில் இருந்தே சோதனை சாவடிகளை கண்காணிக்கும் வசதி அதி நவீன கட்டுப்பாட்டு அறை துவக்கம்
தேனி: மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சோதனைச்சாவடிகளை நிர்வகிக்க தேனி எஸ்.பி., அலுவலக 2வது தளத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் அதிநவீன கட்டுப்பாட்டுஅறை துவக்க விழா நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சிவபிரசாத் நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தனர். மாவட்டத்தில் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு என மாநில எல்லை சோதனை சாவடிகள் உள்ளன. மாவட்ட எல்கைகளாக ஆண்டிபட்டிதிம்மரசநாயக்கனுார் கணவாய் சோதனைச்சாவடி, காட்ரோடு, முந்தல் சோதனைச்சாவடி என 4 மாவட்ட சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த ஏழு சோதனை சாவடிகள் உள்ளன.
இங்கு 14 ஆட்டோமேட்டிக் கேமராக்கள், வீடியோ பதிவு தரவுகளை பெறக்கூடிய 14 ஐ.பி., கேமராக்களும் பொறுத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு 7சோதனைச் சாவடிகளும் 24 மணிநேரமும் தேனி கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும். இதனால் குற்றங்களை எளிதாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும்.
எஸ்.பி., கூறியதாவது: மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் பரிந்துரையில் கலெக்டர் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து இதற்கான நிதி வழங்கப்பட்டுள்து.மின்தடை ஏற்பட்டாலும் ஆறு மணி நேர பவர் பேக்கப் வசதியும், வீடியோ தரவுகளை பின்னோக்கி பார்க்கும் வசதியும் உள்ளன. இதனால் எளிதாக குற்றச்சம்பவங்களைகண்டறிந்து ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் அலெக்ஸ்சாண்டர் , சுகுமாறன், குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பெரியசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.,க்கள் தீவான்மைதீன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.