கம்பராயப் பெருமாள் கோயில் பயணியர் விடுதி அமைக்க ஆய்வு
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் காலி இடத்தில் இரண்டு மாடி தங்கும் விடுதி கட்ட ஹிந்து சமய அறநிலைய துறை திட்டம் தயாரித்து அதற்கான ஆய்வு துவக்க உள்ளது.ஆண்டுதோறும் சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்களிலும் சபரிமலைக்கு கம்பம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
அவ்வாறு செல்பவர்கள் கம்பத்தில் தங்கி சுருளி அருவிக்கு சென்று குளித்து செல்கின்றனர்.
இங்கு பக்தர்களுக்கு தங்குவதற்கு போதிய வசதி இல்லை. பென்னிகுக் மண்டபம், தேக்கடி சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தங்குவதற்கு சரியான விடுதிகள் இன்றி தவித்து வருகின்றனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகும். இங்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும் பூஜையில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகின்றனர். வசதிக்காகவும், கோயிலின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கம்ப ராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான காலி இடத்தில் இரண்டு மாடி தங்கும் விடுதி கட்ட ஹிந்து அறநிலையத் துறை பரிசீலித்து வருகிறது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஹிந்து சமய அறநிலைய துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஹிந்து அறநிலைய துறை இது தொடர்பான ஆய்வை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.