Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ராட்டினங்கள் ரூ.3.06 கோடிக்கு ஏலம்

தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கு ரூ.3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய திருவிழாக்கள் மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் முடிக்காணிக்கை, கண்மலர், கண்அடக்கம் விற்பனை, உணவு விற்பனை ஸ்டால்கள் அமைத்தல், ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் மார்ச் 6ல் நடந்தது. இதில் ராட்டினம் அமைக்க கூடுதல் தொகை நிர்ணயித்துள்ளதாக ஏலதாரர்கள் புறக்கணித்தனர்.

நேற்று ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் கார்த்திக் தலைமையில் ராட்டினத்திற்கான ஏலம் நடந்தது.

கோயில் செயல் அலுவலர் நாராயணி, அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். பொது ஏலத்தில் ரூ.2.93 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இது அதிக தொகை எனவும், குறைக்க வேண்டும் என ஏலதாரர்கள் கோரினர்.

இதனை தொடர்ந்து ஏலத்தொகை ரூ.2.80 கோடியாக குறைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 11 பேரும் ஏலம் கேட்க முன்வரவில்லை.

அதன் பின் டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது. அதில் 9 பேர் மூடிய டெண்டர் படிவம் அளித்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயராஜன் ரூ.3.06 கோடிக்கு ஏலம் கோரி இருந்தார். இந்த தொகை கடந்தாண்டை விட ரூ.51 லட்சம் அதிகமாகும். இவருக்கு ஏலம் உறுதி செய்தனர். ஏலத்தை கோயில் மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்காளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *