ஜீவாமிர்தம் இயற்கை உரம் தயாரிப்பு கல்லுாரி மாணவிகள் செயல் விளக்கம்
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து, கிருஷ்ணா வேளாண்மை கல்லுாரி மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மாணவிகள் தீபிகா, திவ்யா, ஜெனி ரோஸ், காவியா, நிரஞ்சனா, ரித்திகா, ரோஸ்மிதா, சகுந்தலா, சினேகா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இயற்கை உரமாகிய ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
மாட்டுச்சாணம், மாட்டு கோமியம் இவற்றின் கலவையில் சிறிது வெல்லம், ஏதேனும் ஒரு பருப்பு வகை மாவு ஆகியவற்றையும் சேர்த்து ஒரு வாரத்திற்கு நொதிக்க விட்டால் இதுவே பயிர்களுக்கு சிறந்த இயற்கை உரமாகிவிடும்.
ஜீவாமிர்தம் தாவரங்களின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிப்பதுடன், மண்ணின் இயற்கையான செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது.
மண்ணை வளமாக மாற்றுகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விவசாயிகள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.