Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

வெயிலில் பயணிகள் சிரமம்: பெரியகுளம் நகராட்சி அலட்சியம்

பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் இரு புறங்களிலும் இருந்த நிழற்கூரைகளை அகற்றியதால் தற்போதைய கோடை ‘வெயிலில்’ பயணிகள் சிரமப்படுகின்றனர்.

பெரியகுளம் நகராட்சி தென்கரையில் திண்டுக்கல் குமுளி மாநில நெடுஞ்சாலையில் மூன்றாந்தல் பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றினர். அப்போது தேனி மார்க்கமாக செல்லும் பயணிகளுக்காக பஸ்ஸ்டாப்பில் இருந்த பயணிகள் நிழற் கூரையும், எதிர்ப்புறம் வத்தலகுண்டு மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கான ஸ்டாப்பில் இருந்த நிழற்கூரையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இவை நெடுஞ்சாலை துறையின் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டவை. இதனால் இடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி தலைவர் சுமிதா புதிதாக கட்டிதர உறுதியளித்து ஓராண்டுக்கு மேலாகியும் இங்கு நிழற்கூரை அமைக்கவில்லை.

இதனால் பயணிகள் ரோட்டின் ஓரங்களில் நின்று அவதிப்படுவது தொடர்கிறது. 5 மாதங்களுக்கு முன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2.16 லட்சம் மதிப்பில் சிறிய அளவில் தகரசெட் அமைக்கும் பணி நடந்தது. கான்கிரீட் நிழற்கூரை இடித்து விட்டு தகரசெட் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு தகரத்தையும் கழற்றி சென்றனர். வெயிலை சமாளிக்க கடைகளின் அருகே பயணிகள் ஒதுங்கினால் கடைக்காரர்கள் விரட்டுகின்றனர்.

கண்டு கொள்ளாத மக்கள் பிரதிநிதி:

பயணிகள் கூறுகையில், ‘சிறு கிராமங்களில் கூட கான்கீரிட் கட்டடத்திலான பயணிகள் நிழற்கூரை தொகுதி எம்.எல்.ஏ., வளர்ச்சி கட்டியுள்ளனர். ஆனால் பெரியகுளம் நகராட்சியில் இருந்த நிழற்கூரைகளை அகற்றிவிட்டு பொதுமக்களை வெயிலில் தவிக்க விடுகின்றனர். தினமும் அந்த வழியாக காரில் செல்லும் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர்’, என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *