மூணாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்; 5 கி.மீ., அணி வகுத்து நின்ற வாகனங்கள்
மூணாறில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கொச்சி — தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து கி.மீ., துாரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
மூணாறில் ஆண்டுதோறும் கோடை சுற்றுலா சீசன் களை கட்டும். கேரளாவில் ஏப்.1ல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடபட்டபோதும் வார விடுமுறை நாட்களில் மட்டும் பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றிற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் மே 1 முதல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் வருகை அதிகரித்தது.
கடந்த 2 நாட்களாக பயணிகள் குவிந்ததால், மூணாறு நகர், மாட்டுபட்டி, எக்கோ பாய்ண்ட், டாப் ஸ்டேஷன், ராஜமலை நுழைவு பகுதியான 5ம் மைல், லக்கம் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து பள்ளிவாசல் எஸ்டேட் வரை ஐந்து கி.மீ., தொலைவுக்கு நேற்று வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஆகியோர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல இயலாமல் திண்டாடினர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின.
நகரில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் இருந்து கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிசாலையில் பழைய மூணாறு வழியாக வாகனங்களை போலீசார், திரும்பி விட்டு நெரிசலை சமாளித்தனர்.