Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

நிதி ஆதாரம் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை, நிதி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி, பொது மக்கள் தவிக்கின்றனர்.

இந்த ஊராட்சியில் ராமகிருஷ்ணாபுரம், கரட்டுப்பட்டி, கொழிஞ்சிபட்டி ஆகிய கிராமங்களில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக இங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்காமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.

பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லாததால், நிலத்தடி நீரை ‘போர்வெல்’ மூலம் எடுத்து, பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வடிகால் சேதமடைந்துள்ளது.

பராமரிப்பு இன்றி கழிவுநீரால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் ஏற்பட்டுள்ள அடிப்படை தேவைகள் குறித்து பொது மக்கள் வழங்கும் புகார்களுக்கு தீர்வு கொடுக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகிறது.

ஊராட்சி மக்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்து கூறியதாவது:

குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்

எம்.ராஜபெருமாள், ராமகிருஷ்ணாபுரம்: ஊராட்சியில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் குழாய் பதிப்புக்கு தெருவில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்பட வில்லை.

இத்திட்டம் மூலம் குடிநீரும் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கவில்லை. குழாய்களை ஒப்புக்காக பதித்து இணைப்பு வழங்கிச் சென்றுள்ளனர். குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் அமைந்துள்ள வடிகால் அமைப்புகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை.

ஊராட்சியில் குப்பையும் ஆங்காங்கே குவிகிறது. ஆண், பெண்களுக்கு பொதுக் கழிப்பறை வசதி இல்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியும் சமுதாய கூட வசதி இல்லை.

அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதனை அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கையும் இல்லை., என்றார்.

ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு

ஜி.ராமச்சந்திரன், ராமகிருஷ்ணாபுரம்: ராமகிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி விட்டது.

இதனால் கிராமத்தின் வழியாக வந்த அரசு பஸ் வளைவில் திரும்ப முடியாமல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு கி.மீ., துாரம் நடந்து அழகாபுரியில் பஸ் ஏற வேண்டி உள்ளது.

புதிய குடிநீர் திட்டத்தில் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. சுடுகாடு பகுதியில் தண்ணீர் உள்பட எந்த வசதியும் இல்லை. பராமரிப்பின்றி பெண்கள் கழிப்பறை மூடப்பட்டுள்ளது. தண்ணீர் வசதியும் இல்லை.

புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவங்கி மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் முழுமை பெறவில்லை. பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமத்தில் தேவையான இடங்களில் புதிய வடிகால், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். ரேஷன் கடை அருகே உள்ள நாடக மேடை மேல் பகுதி அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக கொண்ட இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்., என்றார்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: நலிவடைந்த இந்த ஊராட்சியில் நிதி ஆதாரம் இல்லை. துப்புரவு பணியாளர், குடிநீர் பம்ப் ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியவில்லை.

அரசு மூலம் கிடைக்கும் ஊராட்சிக்கான பராமரிப்பு தொகையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நலிவடைந்த இந்த ஊராட்சிக்கு அரசு மூலம் கூடுதல் நிதி கிடைக்கவும், ஊராட்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான அவசிய அடிப்படை தேவைகளை உடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *