இ- பாஸ் அமல்படுத்த கோரிக்கை
மூணாறுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு: இ- பாஸ் அமல்படுத்த கோரிக்கை
”மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால், இ -பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.” என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர். அங்கு இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்வதை ஏராளமானோர் தவிர்க்கின்றனர். மாறாக கேரளாவில் ‘தென்னகத்து காஷ்மீர்’ என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
கேரளாவில் மட்டும் பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் வருகை கணிசமாக உள்ளது. இதனிடையே கடந்த மூன்று நாட்களாக வார விடுமுறை. தமிழகத்தில் தமிழ்த் புத்தாண்டு, கேரளாவில் விஷூ பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்தது. அதனால் மூணாறு நகர் உள்பட சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. மேலும் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் பள்ளி, கல்லுாரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டதும் பயணிகள் வருகை அதிகரிக்கும். போக்குவரத்து ஸ்தம்பித்து ஒவ்வொரு நாளும் பயணிகள், பொது மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப்படும். வரும் மே மாதம் மட்டும் தமிழகத்தில் போன்று இ பாஸ் முறையை அமல் படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகவும் சமூக ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.