முன்னறிவிப்பு இன்றி நடந்த தண்டவாள சீரமைப்பு பணி
தேனி மதுரை ரோட்டில் முன் அறிவிப்பு இன்றி தண்டவாள பணிக்காக ரயில்வே கேட் மூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்றன.
தேனி மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இதனால் வேளாண் பொறியியல்துறை அலுவலகத்தில் இருந்து அரசு ஐ.டி.ஐ., வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரை செல்லும் வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன.
இந்நிலையில் நேற்று காலை 11:15 மணி அளவில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் 20 நிமிடங்கள் மூடப்பட்டது.
இதனால் வாகனங்கள் ஒரு புறம் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலும், மறுபுறம் பங்களாமேடு வரையிலும் அணிவகுத்து நின்றன.
எதற்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது என தெரியாமல் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.இந்நிலையில் ரயில்வே கேட் பகுதிக்கு வந்த போலீசார் வலியுறுத்தலில் கேட் திறக்கப்பட்டது.
மேலும் தண்டவாள பராமரிப்பு பணிகளை போக்குவரத்து குறைந்த நேரத்தில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.